இன்றைய கல்வி முறையில் ஒரு மாணவர் பாடசாலை தரத்தில் படிக்கும்போது அடுத்து அவர் தேர்ந்தெடுக்கப் போகும் துறை என்ன என்பதைத் தீர்மானிப்பதில் பல யோசனைகள் இடம் பெறும். அன்றைய கால கட்டத்தில் கலை மற்றும் விஞ்ஞானம் என்ற இரண்டு பகுதிகளே பொதுவாகப் பேசப்பட்டவை. இன்றைய பல துறைகள் அவற்றுள் அடக்கப்பட்டிருந்தன. ஆனால் உலகத்தின் அறிவியல் வளர்ச்சி ஒவ்வொரு துறையையும் அலசிக் கற்பதற்கு ஏதுவாகப் பல துறைகளாகப் பிரித்து விட்டது. எது எப்படி இருப்பினும் அடிப்படையில் அவை ஒன்றில் கலைத் துறை அல்லது விஞ்ஞானத் துறை என்ற இரண்டினுள் அடங்கியே காணப்படுகின்றன. கலையையும் விஞ்ஞானத்தையும் பிரித்துப் பார்ப்பதே மனித இயல்பாகிவிட்டது. இவை இரண்டும் வேறுபாடுகளை உடையது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், கலையும் விஞ்ஞானமும் ஒரு உடலின் தலையையும் இதயத்தையும் போன்றவையே. எப்படி எனப் பார்த்தால்....... விஞ்ஞானம் என்பது மாறும் தன்மையுள்ள நிலைகளைக் கொண்டது (Variable Facts). அத்துடன், காரணத்துடன் கூடிய சர்ச்சைகளையும் மற்றும் தீர்க்கமான முடிவுகளையும் கொண்டது. (Reasoned Arguments and Definite Conclusions). கலை என்பது மாறுபட்ட விதமாகக் கற்பனைகளுடனும் மனரிதியிலான எண்ணப்பாடுகளையும் கொண்டது. (Imagination and Feelings/Emotions). விஞ்ஞானத்திற்கு துல்லியமும் உண்மைநிலை அடையும் தன்மையும் தேவையாக உள்ளது (Accuracy and approach to truth)கலையைப் பொறுத்தளவில் சாராம்சத்திற்கும் நாகரிகமான நற்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது (Essence and Aesthetics). பகுப்பாய்வுச் செயற்பாடுகள் மூலம் உண்மையை உணர்வது விஞ்ஞான வழிமுறையாகும் (Analysis). உலக அநுபவங்களின் துண்டு துணிக்கைகளை ஒன்றுபடுத்த முனைந்து ரசிப்பது கலையின் வழியாகும் (Integrating bits and pieces). அப்படியாயின், இவை இரண்டிற்கும் இடையில் இணைப்புக்கு ஒரு வழியும் இல்லையா? ஆம், இருக்கிறது இணைப்பு! எவ்வாறு......? இன்று விஞ்ஞானத்திற் காணப்படுகின்ற பல கண்டுபிடிப்புக்களுக்குக் காரணம் கலையுள்ளத்துடன் இருக்கும் பலரின் உள்ளுணர்விலும் கற்பனைகளிலும் தோன்றியமையே. மிகச் சாதாரணமான ஒரு உதாரணம் புகைப்படம் எடுத்தல் என்பதையே கூறலாம். ஏனெனில் அன்று எத்துணை திறமையான சித்திரக்காரர்கள் இருந்தபோதிலும் அவற்றில் 100 வீதம் உண்மையைக் கொண்டுவர முடிந்ததில்லை. இன்றைய கணினித் தொழில் நுட்பம் வரைகலையில் (Graphics) எத்தனையோ வளர்ச்சிகளையும் புதுப்புது உத்திகளையும் கலைத்துறைக்கு உதவுவதில் உண்மை இல்லாமலில்லை. அச்சுக் கலை, வானொலி, தொலைக்காட்சி, சினிமா என எல்லாமே கலையின் கற்பனையிலே தோன்றியவைதான். இதனால்த்தானோ என்னவோ கலையை வளர்ப்பதிலும் அவை உதவுகின்றன. இவைகளை வேற்றுமைப் படுத்துவது மனித இனத்திற்கு நன்மை அளிக்காது என்பதால் கலையும் விஞ்ஞானமும் தனித்தனியானவை அல்ல என்பதை பரந்த பார்வையுடன் காணவேண்டும். ஒருவர் உடலில் தலையையும் இதயத்தையும் எப்படி எதிரெதிரானது என எண்ண இயலாதோ அது போலவே கலையும் விஞ்ஞானமும் ஒன்றிற்கொன்று விரோதம் கொண்டவை அல்ல.
No comments:
Post a Comment