அமெரிக்கப் புல்வெளிகளில் வாழும் ஓருவகையான இனக் கோழிகளின் கூட்டினுள் எப்படியோ கழுகு ஒன்றின் முட்டை அகப்பட்டுவிட்டது. ஏனைய முட்டைகளுடன் அடைகாக்கப்பட்டுச் சிலநாட்களில் அந்த முட்டைபொரித்துக் கழுகுக் குஞ்சு வெளிவந்தது. ஏனைய புல்வெளிக் குஞ்சுகளுடன் அது வளர்ந்ததால் தன்னையும் அவ்வினமாகவே நினைத்து வளர்ந்து வந்தது. அது பறப்பதற்கோ அல்லது தன் இனத்திற்குரிய உணவிலோ எவ்வித நாட்டத்தையும் கொள்ளாது ஏனைய குஞ்சுகள் போலவே அழுகிய இடங்களில் கொத்தி விதைகளைச் சாப்பிட்டது. கத்தும்போதும் மற்றவை செய்வது போலவே செய்தது.
புல்வெளிப் பறவைகள் பறக்கும் சிறிதளவு உயரத்திற்கே இதுவும் பறந்தது. மேற்கொண்டு பறப்பதற்கு முயற்சிக்கவும் இல்லை.
ஒருநாள் மிக உயரத்தில் பரந்த ஆகாயத்தில் ஒரு கழுகு மிகவும் அழகாக வட்டமடித்துப் பறந்து கொண்டிருப்பதை அது கண்டு ‘அந்த அழகான பறவை என்ன?’ எனக்கேட்டது. அதற்கு மற்றையவை ‘அது ஒரு கழுகு. அது மிகவும் தனித்துவமான ஒன்று ஆனால், நீ அதுபோலப் பறக்க இயலாது ஏனெனில் நீ ஒரு சாதாரண புல்வெளிப் பறவை மட்டுமே’ என்று கூறின.
அந்தக் கழுகுக்குஞ்சு ஒருபோதும் மறுயோசனை செய்யாது அவை சொல்வதே சரியென எண்ணித் தொடர்ந்து தனது இயல்பான தன்மைகளை அறியாது, தரைப்பறவை வாழ்வையே வாழ்ந்து இறந்தது. அதன் தூரநோக்கற்ற குறைந்த அறிவே அதனை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டது. ஆம், அது ஒரு கட்டுக்குள் வாழ்ந்து தன் வாழ்வை வெற்றிகொள்ளத் தவறிவிட்டது. எல்லாம் விரயமாகிவிட்டதே.
எனவே வாழ்வில் வெற்றி பெறவேண்டுமானால், எவரையும் அல்லது எந்த நிலையையும் அல்லது ஏன் உங்கள் சொந்த எண்ணங்களாக இருந்தாலும் இழப்பிற்கு வழிகோலும் ஒரு நிர்ப்பந்த நிலை ஏற்படாது வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
அதுவே முழுமையான வெற்றி வாழ்விற்கு வழியாகும்.
