இனிப்பும் கசப்பும்
அன்றாடம் வாழ்கையிலே நாம் அடிக்கடி கேட்கும்,
"உண்மை கசப்பாயிருக்கிறதா?"
”படிப்பதென்றால் அவனுக்கு அது வேப்பங்காயாக இருக்கிறது”
”கசப்பான மருந்துதான், ஆனால் குணமாகவேண்டும் என்பதற்காகச் சாப்பிடுகிறேன்”
”போட்டியில் வெற்றியீட்டிய இனிப்பான செய்தி கிடைத்தது”
”தன் விடயம் நடக்கவேண்டுமென்பதற்காக இனிக்கஇனிக்கப் பேசினார்”
மேற்கண்ட வசனங்களைப்பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிந்தித்துப்பார்ப்போமானால் இரண்டு சுவைகள் அதில் உவமானமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அறுசுவை என்றும், அறுசுவை உணவு என்றும் பல்லாண்டு காலமாக எம்மவர் மத்தியில் சுவைபற்றிய விளக்கம் உண்டு. எனினும் இவற்றுள் இந்த இனிப்பு, கசப்பு என்ற இருசுவைகளே முன்னணியில் எவர் வாயிலும் உபயோகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதிலும் இவை உணவு விடயத்தில் மட்டுமல்லாது உணர்வுகளின் வெளிப்பாடாகவும் அதிகம் பாவனையில் இருப்பதையும் நாம் நோக்கவேண்டும். விருப்பமி்ன்மையை கசப்பாகவும் விருப்பினை இனிப்பாகவும் உவமானப்படுத்துவது அன்றுமுதல் தொடர்வதையும் பார்க்கிறோம்.
எமது நாக்கு எல்லாச் சுவைகளையும் ஏற்கும் தன்மையுடையதே. அது தன்க்காக எந்தச் சுவைவையயும் விரும்பிக் கேட்பதில்லை. மேலும் உடல் நலத்திற்கு எல்லாச் சுவைகளும் கலந்த உணவே தேவையாகும். ஏனெனில் எல்லா உணவுப் பொருட்களும் இனிப்பு கசப்பு என்ற இருசுவைவகைகளுள் மட்டும் அடங்கிவிடவில்லை. எனவே உடலிற்குத் தேவையான ஊட்டத்திற்கு சுவைகளில் தவிர்ப்புச் செய்வது சாியன செயலாகக் கொள்ளமுடியாது.
இருப்பினும் மக்களது பாவனையில் கசப்பினைஒரு வேண்த்தகாத பொருளாகவும் இனிப்பு மனத்துக்கு இதமானதாகவும் கருதுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் முன் குறிப்பிட்டது போன்ற பேச்சுக்குக் காரணமாகின்றது.
நீரிழிவு நோயுள்ளவர்கள் இனிப்பானவற்றைத் தவிர்க்கவேண்டும். இல்லையேல் வியாதியை முற்றவைப்பதாகவே முடியும். பாகற்காய் கசப்பானதுதான், முள்ளங்கி முகம்சுழிக்க வைப்பதுதான். ஆனால் இவற்றை உண்ணும்படி ஆலோசனைகள் கூறப்படுகிறதே. இனிப்பான பண்டங்கள் பற்களைப் பாதிக்கும் எனவும் மருத்துவத்தில் கூறப்படுகிறது. கசப்பானவை என்பவை ஊறு விளைவிப்பதாகக் கூறப்பட்டதில்லை. இதுபற்றி நாம் இங்கு அதிகம் குறிப்பிட வரவில்லை. ஆனால் இங்கு எழுப்பப்படும் வினா எதுவெனில், இவ்வழக்கம் எப்படி, எப்போது மற்றும் ஏன் ஏற்பட்டது என்பதுதான்.
ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது ஒரு முக்கிய அம்சமாகும். மணிக்கட்டில் பார்க்கப்படும் நாடியானது வலது கையில் மூன்று, இடது கையில் மூன்று என ஆறு இடங்கள் உண்டு. வாதம், பித்தம், கபம் என்ற முப்பெரும் பகுதிகளுக்குள் நோய்களை வகைப்படுத்தி அவற்றின் பிரதிபலிப்பை மணிக்கட்டில உள்ள நாடிகளில் உணர்ந்துகொள்ளும் திறமை படைத்தவர்கள் இவ்வைத்திய முறைகளில் தேர்ச்சிபெற்ற வைத்தியர்கள். நாடிகளின் துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து அதற்கேற்ற விதத்தில் மருந்துகள், பத்திய முறைகள் வரையறுக்கப்படும்.
இன்று அலோபதி வைத்தியமும் நம்நாட்டு மருத்துவ முறைகளின் சிறப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்பதும் ஒரு தத்துவமாகக் கொள்ளப்படுவதுண்டு. சுவைகளை வகைப்படுத்தி ஒவ்வொரு சுவையும் மனித தாதுக்களிடையே ஆட்சி செய்வதாகக் கொள்ளப்படலாம். இதனடிப்படையில் ஆறு நாடிகளுக்கும் ஆறு சுவைகளையும் ஏற்றவிதமாகக் கொண்டு ஊட்டத்தின் அளவினை அனுமானிக்க உதவுவதாகச் சொல்லப்படுகின்றது.
நாடியானது மணிக்கட்டில் பெருவிரல் பக்கத்தில் உள்ளங்கை முடிந்து முன்கை ஆரம்பமாகும் இடத்தில் அவதானிக்கப்படுகிறது. பெருவிரலுக்கு அடியில் முன்கையில் உள்ள மொழயின் அருகிலேயிருந்து மேல் நோக்கி வாதநாடி, பித்தநாடி, சிலேட்டுமநாடி என்ற ஒழுங்கில் காணப்படுகிறது. இது இரு கைகளுக்கும் பொருந்தும். இதன்படி சுவைகள் ஒவ்வொன்றும் பின்வருமாறு அமைகின்றன-
வலது இடது
நாடிகள்; தாது சுவை தாது சுவை
வாதம் இரததம்; துவர்ப்பு கொழுப்பு புளிப்பு
பித்தம; எலும்பு உப்பு நரம்பு கசப்பு
சிலேட்டுமம்; தசை இனிப்பு உமிழ்நீர் காரம்
மேற்காட்டப்பட்டவாறு எமது உடலின் தாதுக்கள் ஒவ்வென்றையும் ஒவ்வொரு சுவை ஆளுகின்றது. மேலும் ஒரு விடயத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டும். நாவில் தென்படும் சுவையைக்கொண்டு சுவைக்கும் பொருளின் தன்மையை நாம் கண்டுகொள்ள இயலாது. உதாரணமாக, தேன் நாவிற்கு இனி்ப்பானதாகத் தோற்றினாலும் அதன் தன்மை கசப்புத்தான். (அதனாற்றான் ”தேன்போல இனிக்கப் பேசினார்” என்பதை நம்ப முடியாதவரின் பேச்சாக அன்று அர்த்தப்படுத்தினார்களோ?).
கசப்பின் முக்கியத்துவம் கருதி, அதாவது அது வழங்கும் ஊட்டத்தின் தேவைக்காகவே எமது மருத்துவ முறைகளில் தேனுக்கு அதிக மதிப்பளிக்கப் படுகிறது.
மேற்படி அட்டவளையின்படி, நமது நரம்பு சம்பந்தப்பட்ட வரை கசப்பான உணவு வகைகள் அவசியமாகிறது. தசை வளர்ச்சிக் இனிப்புத் தேவையாகிறது. இன்று நரம்புகளுடன் தொடர்புடைய நோய்கள் அதிகாித்துக் காணப்படுவதற்கு அதற்குத் தேவையான ஊட்டமுள்ள உணவு எடுத்துக்கொள்ளாததே காரணமாகலாம். இதற்காக, தசைவளர்ச்சி தேவையில்லை என்பதல்ல. தசைவளர்ச்சி ஓரளவிற்கு இருந்தாலே போதும். மேலும் அதனை வேண்டிய நேரங்களில் புதிப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நமது நரம்பு மண்டலம் அப்படியானதல்ல. சிலசமயங்களில் மீட்டுக்கொள்ள முடியாத அளவிற்குப் பாதிப்பு ஏற்படலாம்.
இன்றைய நரம்பு மண்டல பாதிப்பிற்கு எமது பழக்கங்களும் உணவு முறைகளும் ஓரளவு காரணம் என்றே கூறலாம். குழந்தைப்பருவத்திலிருந்தே இனிப்பு உகந்ததொன்றாகவும், கசப்பு ஏற்கப்பட முடியாததொன்றாகவும் மனிதில் பதிய வைக்கப்படுகிறது. கசப்பான மருந்து சாப்பிட்டவுடன் அதை மாற்ற இனிப்பினை வழங்குவது தவறல்ல. ஆனால் இது நடைப்முறைப் பழக்கத்தல் ஏற்பட்ட ஒன்றே தவிர, கரணமெதுவும் அங்கில்லை. சிறுவயது முதலே எல்லாச் சுவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தால் இப்படி நிலை பின்நாட்களில் இருக்காது.
வேம்பு ஒரு மருத்துவர் எனக்கொள்ளலாம். வேம்பின் அமைத்துப் பகுதிகளுமே மனிதனுக்குப் பயன்படக் கூடியன. இது ஒரு நோய்நீக்கி என்பதனை, அம்மரத்தில் ஒட்டுண்ணிகள் பரவாமையிலிருந்தும், வேப்பம் பிண்ணாக்கு சிறந்த கிருமிநாசினி என்பதிலிருந்தும் அறியலாம். அதன் பாகங்கள் உள் எடுக்கவும் வெளிப் பாவனைக்கும் உகந்தனவாகும். வேம்பின் பயனை எழுதுவதானால் அது ஒரு தனிக் கட்டுரையாகிவிடும். இத்தனை சிறப்புப் பெற்ற வேம்பு கொண்டுள்ள சுவை கசப்புத்தான்.
இனிப்பு தசை வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. தசைகள் வலுவாக இருந்தாலே உடற்சோர்வின்றி இயங்கமுடியும். (சோர்வு என்பது வேறு, சோம்பல் என்பது வேறு என்பதை இங்கு நாம் கவனிக்கவேண்டும்).
காரம் ஓரளவு தேவை. நீர் போதியளவு அருந்துவதனால் காரத்தின் அளவு சிறிது குறையலாம். உணவு ஜீரணம் (சமிபாடு) அடைய உமழ்நீர் சுரக்க வேண்டும். உமிழ்நீர் சுரப்பிற்கு காரம் தேவை. ஆனால் அளவோடு. அளவிற்கு அதிகமானால் வேறு உடல் உபாதைகளுக்கு வழவகுத்துவிடும்.
இனிப்புப் பாவனையை அதிகப்படுத்தும் சுவைகளை மேற்பர்த்தோம். ஏனைய சுவைகளின் அவசியம் என்ன என்பதை மேற்படி அட்டவணையிலிருந்து அறிய முடியும்.
அடுத்து சற்று வெறுப்புக் குள்ளான சுவை புளிப்பு எனலாம்.
“அவனுக்கு இப்ப கொஞ்சம் புளிப்பேறிவிட்டது
“உனக்கென்ன புளிப்பா?“
கொழுப்பு அதிகமாகிவிட்டது என்பதான கருத்திலே இப்படியான பேச்சுக்கள் அமைவதுண்டு. உண்மைதான், கொழுப்பு அதிகமாகக்கூடாதே தவிர, தேவையில்லை என்பதல்ல. இங்கும் புளிப்பு சுவை இனிப்புக்கு ஈடாகாது என்பது போன்ற உணர்வின் வெளிப்பாட்டிலேயே “நரியும் திராட்சைப் பழமும்“ கதை உருவாகியுள்ளது.
இதுபோல, இனிப்புச் சுவையை முதன்மைப்படுத்தும் எவ்வளவோ விடயங்கள் தொன்றுதொட்டு வருகின்றமைக்கு ஏதாவது காரணம் உண்டா?
ஏனைய சுவையுடைய பண்டங்களின் தேவையும் உடலிற்கு முக்கியமானதாகவே இருந்தாலும், இந்த இனிப்பு என்ற ஒரு சுவைக்கு மட்டும் சிறப்பானது என்ற வகையில் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பது எதனால்?
இனிப்புச் சுவையை விரும்பாதவர்களும் “இனிக்கிறதா, கசக்கிறதா?” என்ற கேள்வியைக் கேளாமலில்லை. அவர்களிடமும் கேட்கப்படுகிறது – இது ஏன்?
என்ன, இதுவும் கசக்கிறதா, இனிக்கிறதா?