கடவுளின் பிரதான தொழில் என்ன?
ஒரு நாட்டில் மிகவும் தற்பெருமை பிடித்த ஆனால் உதார குணமும் கொண்ட ஒரு அரசன் அரசாட்சி செய்து வந்தான். மிகவும் அறிவாளியான பிரதம அமைச்சரையும் அவன் வைத்திருக்கத் தவறவில்லை. அநேகமாக அறிவுசார் விடயங்களை இருவரும் ஆராய்ந்துகொண்டே இருப்பார்கள். இந்நிலையில் ஒருநாள் அந்த அரசன் அமைச்சருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான். ”அமைச்சரே, இவ்வுலகில் ஒவ்வொருவரும் தமது வழக்கமான செயல்களை விட ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலையைப் பிரதானமாகக் கொண்டுள்ளனர். உதாரணமாக, அரசனான நான் ஆட்சி செய்கிறேன், சிப்பாய் போரிடுகிறான், வியாபாரி வியாபாரம் செய்கிறான், ஆசிரியர் கற்பிக்கிறார், குரு உபதேசம் செய்கிறார். ஆனால் இதுபோல் கடவுள் என்ன வேலையைப் பிரதானமாகச் செய்கிறார்? இதைத் தாங்கள் கூற முடியுமா?” எனக் கேட்டான்.
அமைச்சருக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. அனைத்துக் காரியங்களையும் செய்பவர் கடவுள். அதில் பிரதானம் என்பது எது என்பதை அவர் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. ”அரசே, என்மனதிலும் அதே கேள்வி உண்டு. நானும் அதுபற்றி யோசித்துப் பார்க்கவேண்டும்” என்றார் சாதுரியமாக. பிரதம அமைச்சர் அரசனோடு அரசாட்சி விடயங்கள் மற்றும் உலக விடயங்களைப் பற்றி விவாதிப்பவர், ஆலோசனைகளும் கூறுபவர். ஆனால் இது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயமாதலால் அவரால் உடனே எதுவும் கூற இயலவில்லை. அதற்குரிய விடை கூறுவதற்கும் சிரமம் உண்டு என நினைத்தார். எனவே, ஆன்மீகம் சம்பந்தப்பட்டது என்பதால் ஆன்மீகம் நிறைந்த குரு ஒருவரிடம் இதைக் கேட்கலாம் என அவர் கூறினார்.
அரசனும் தனது அரண்மனைக் குருவானவரை அழைத்து இந்தக் கேள்வியைக் கேட்டான். அவரும் சிறிது திகைத்துத்தான் போய்விட்டார். ஆயினும் அரசனின் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதால் யோசிப்பதற்கு அவகாசம் கருதி, தனக்கு ஒரு வாரகாலம் அவகாசம் தரும்படியும் அதன்பின் அதற்குப் பதில் தருவதாகவும் கூறி அந்நேரத்திற்குத் தப்பிக்கொண்டார். ஆயினும் அல்லும் பகலும் அதைப்பற்றியே சிந்தித்துப் பார்த்தபடி இருந்தார். இதற்கு எப்படியும் விடை கண்டே ஆகவேண்டும்.
இதே நிலையில் ஒருவாரம் கடந்தது. குரு இன்னமும் விடையைக் கண்டு பிடிக்கவில்லை. அரசனின் கோபத்திற்காளாகி தண்டனை பெறுவதா அல்லது நாட்டைவிட்டு ஓடிவிடலாமா எனக் கவலையுடன் வீட்டுத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அவரின் மாடுகளை மேய்ப்போன் அவர் கவலையுடன் இருப்பதை உணர்ந்து, அதற்கான காரணத்தைத் தான் அறியலாமா எனப் பணிவுடன் கேட்டான். அவரும் எல்லாவற்றையும் கூறி, ”கடவுள் செய்யும் வேலை என்ன என்று கேட்டால் எதைத்தான் குறிப்பிட்டுக் கூறமுடியும்?” என்றார். அந்த மந்தைமேய்ப்போன் பதில் சொல்வான் என்று அவர் எதிர்பார்க்கவும் இல்லை.
ஆனால் அவனோ, ”குருவே, இதுதானா உங்கள் கவலை? அரசனிடம் நான் வந்து அதற்கான பதிலைக் கூறுகிறேன். என்னை அழைத்துப் போங்கள்” என்றான்.
குருவுக்கு யோசனையாகிவிட்டது. விபரீதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என எண்ணி அந்தப் பதிலைத் தன்னிடம் கூறும்படி வேண்டினார். ஆனால் அரசனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்தை விரும்பிய அவன் தன்னைக் கூட்டிக் கொண்டு அரசனிடம் போகும்படி கூறிவிட்டான்.
மனதில் சஞ்சலத்துடன் குருவும் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அடுத்தநாள் காலையிலேயே அந்த மந்தை மேய்ப்போனையும் அழைத்துக்கொண்டு அரண்மனையை அடைந்தார். அரசனும் அவரிடம் பதில் தெரிந்து விட்டதா என மறக்காமல் கேட்டுவிட்டான். அவரும் எனது மந்தைமேய்ப்போனிடம் கேளுங்கள். அவனுக்குத் தொியும் இதற்கான விடை என்றார். தலைக்கு மேலே வெள்ளம் வந்துவிட்டது, இனிச் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்று அவர் நினைத்தபடியே இருந்தார்.
அரசன் கட்டளைப்படி மந்தைமேய்ப்போனை அரசவையில் கொண்டுவந்து நிறுத்தினர். நைந்துபோன உடையுடனும், எளிமையான தோற்றத்துடனும் இருந்த அவனைச் சபையிலுள்ளோர் ஆச்சரியத்துடனும், அருவருப்புடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அரசனும் பதில் கூறும்படி கட்டளையிட்டான்.
உயர்ந்த இரத்தின சிங்காசனத்தில் கம்பீரமாக இருந்த அரசனை ஒருமுறை நன்றாகப் பார்த்துவிட்டு மௌனமாக சற்று நேரம் நின்றான். பின் அரசனைப் பார்த்து, ”மதிப்பிற்குரிய அரசே, நான் பதிலளிப்பதற்கு முன் நீதி சாஸ்திர முறையிலான ஒரு விடயத்தைத் தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இப்பொழுது என்னிடமிருந்து தங்கள் சந்தேகம் ஒன்றை நிவர்த்தி செய்ய விரும்புகிறீர்கள். ஒரு விடயத்தை என்னிடமிருந்து பெற நினைக்கிறீர்கள். ஆதலால் ஆசிாியன் என்ற முறையில் என்னையும், மாணவன் என்ற நிலையில் தங்களையும் வைக்கவேண்டும். தாங்கள் தயவுசெய்து அந்த ரீதியில் செல்ல ஆவன செய்யவேண்டும்” என்றான் பணிவாக.
அறிவாளியான அரசனும் சிந்தித்தபின் பதிலைப் பெறவேண்டும் என்ற விருப்பினால், சிம்மாசனத்திலிருந்து இறங்கி தரையில் உட்கார்ந்ததுடன் மந்தைமேய்ப்போனை சிம்மாசனத்தில் அமர்த்தியும் விட்டான். மந்தை மேய்ப்போன் சிறிது நேரம் சபையையும் அரசனையும் மாறிமாறிப் பார்த்த பின், ”இதுதான் பதில். இங்குள்ள நிலையும் அதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறது. கடவுளின் பிரதான வேனை எதுவெனில் அகந்தை, கர்வம் உள்ளவர்களைக் கீழே இறக்கி விடுவதும், அவை எதுவுமில்லாது களங்கமற்ற மனமுடையவர்களை மேலே தூக்கி விடுவதும்தான்” என்றான். அத்துடன் உடனே எழுந்து அரசனை வணங்கி, சிம்மாசனத்தில் அமர வைத்துவிட்டான்.
நீதியின்படி, சிம்மாசனத்தில் இருப்பவன் அரசனாக மதிக்கப்படுவான். அவன் கட்டளையை அனைவரும் ஏற்கவேண்டும். இதை உணர்ந்த அந்த களங்கமற்ற மாடு மேய்ப்போன் அதற்கேற்றாற்போல நடந்தும் கொண்டான்.
விபரீதம் எந்த அளவிற்குப் போனது என்பதை அறிந்த அரசனும் தன்னிலையை உணர்ந்து, அன்றிலிருந்து தேவையற்றதும், அகந்தை ஏற்படக் கூடியதுமான அனைத்து விடயங்களையும் தள்ளி வைத்துவிட்டான்.
நன்றி.
No comments:
Post a Comment