Tuesday, April 17, 2012

அமிர்த வர்ஷிணி - வலைமூல சஞ்சிகை

அமிர்த வர்ஷிணி - வலை உலக சஞ்சிகை


இந்து சமயத்தின் தகவல்களை வழங்கும் ஒரு மாதாந்த சஞ்சிகையாக “அமிர்த வர்ஷிணி” கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிவருகிறது. 
இந்து சமயத்தைப்பற்றியும், அதன் தத்துவங்களை வெளிப்படுத்தும் புராணக் கதைகள், ரிஷிகள் மற்றும் சமயப் பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகள், வேதம், வேதாங்கங்கள், உபநிடதங்கள் பற்றிய விளக்கங்கள் மட்டுமன்றி தமிழ்மொழி மூலம் இச் சமயத்தை வளர்த்தவர்கள் பற்றிய செய்திகளும், சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கில நூல்களில் இந்து சமயம் பற்றிய வந்த செய்திகளும் இச் சஞ்சிகையில் வெளியிடப்படுகின்றன.
இந்து தத்துவம் மனித வாழ்வுடன் எப்படி ஒன்றிணைந்த அம்சம் என்பதையும், இதன் உண்மையான பெயர் “சனாதன தர்மம்” என்பதையும் கூறுவதுடன், உண்மையில் இச் சமயமானது ஒரு மதம் என்ற எல்லையைத் தாண்டி, அது மனித வாழ்வினை நெறிப்படுத்தும் ஒரு தத்துவம் என்பதனை உணர்த்தி நிற்பதை இச் சஞ்சிகையில் வரும் கட்டுரைகள், கதைகள்,  கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன. 
ஒரு சஞ்சிகை என்பது என்னென்ன விடயங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. 
மனித வாழ்வின் பல்வேறு மட்டத்தினருக்கும் ஏற்ற விதமாக உள்ளடக்கம் காணப்படுகின்றது. 
இந்து சமய அறிவினை மேம்படுத்தும் நோக்கில் “கேள்வி - பதில்” போட்டி ஒன்றும் உண்டு. வெறுமனே பரிசு பெறுதல் என்பதை விட சமயத்தின் தன்மையப் படித்தறியும் வழியில் இது இருக்கிறது. இவை தவிர, கலை அம்சங்களான இசை, இசை வடிவங்கள், அவற்றின் அடிப்படைகள், வரலாறுகள் என்பனவும், நடனம் பற்றியும், இவை இந்து சமயத்துடன் எவ்வாறு தொடர்புபட்டவை என்பதும் படித்து அறிய முடிகிறது. 
பல்சுவை அம்சங்கள் நிறைந்த இச்சஞ்சிகை இருவழிப் பயன்பாட்டுடன் இருக்கின்றது. ஒரு புறம் இந்து சமயத்தவர்கள் தமது சமயம் பற்றிய அறிவை மேம்படுத்த உதவுகிறது, மறுபுறத்தில், ஏனைய மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு பல தகவல்களையும்  தருகிறது. 
மிகவும் குறைந்த விலையில், (அதாவது இந்திய ரூபா இருபது) நிறைந்த பல விடயங்களை அடக்கியுள்ளது. 
இதுவரை மூன்று மாதங்களுக்கான சஞ்சிகைகளே வந்திருந்த போதும், இவற்றிற்கிடையே காணப்படும் முன்னேற்றங்கள் இச் சஞ்சிகை எத்துணை பெரிய ஆதரவைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிய வைக்கிறது. 
எழுதுவதற்கு எவ்வளவோ உண்டு, விரிவுக்கு அஞ்சி மிகச் சுருக்கமாக இங்கு குறிப்பிடப் பட்டுள்ளது.
இச்சஞசிகைக்கு சந்தா செலுத்த அல்லது இதுபற்றிஅறிய பின்வரும்e-mail லைப் பயன்படுத்தலாம்.
amrithvarshini2012@gmail.com.
நன்றி.

No comments:

Post a Comment